பெங்களூருவின் ஓசூர் சாலை அருகே உள்ள குட்லு பகுதியில் SNN ராஜ் எட்டர்னியா என்ற சொகுசு குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 15 கோபுரங்கள், 972 வீடுகள் உள்ளன.இதில் 14 கோபுரங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. 822 வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.சிக்கல் ஒரே ஒரு கோபுரத்தில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 49 வீடுகளைக் கொண்ட அந்தக் கோபுரத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, நிறுவனம் Water Load Test எனப்படும் பாரம் தாங்கும் பரிசோதனையை நடத்தியுள்ளது.அந்த பரிசோதனையின் போது, கட்டிடம் லேசாக ஒரு பக்கமாக சாய்வது கண்டறியப்பட்டுள்ளது. அஸ்திவாரம் சிறிது சிறிதாக கீழ்நோக்கி அமிழ்வதும் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து மண் பரிசோதனை மீண்டும் செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஆரம்பத்தில் மண் பரிசோதனை செய்த பொறியியல் ஆலோசகர், மண்ணின் தாங்கு திறன் குறித்த தரவுகளை தவறாக வழங்கியது தெரியவந்துள்ளது.வெளிப்பார்வைக்கு கட்டிடம் உறுதியாகத் தெரிந்தாலும், இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதை நிறுவனம் உணர்ந்துள்ளது.இதனால் SNN கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் திரு. அனுஜ் சஞ்சய் ஜெயின் அவர்கள், பாதிக்கப்பட்ட 49 குடும்பங்களை நேரில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார். “உங்கள் உயிர் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இந்தக் கோபுரத்தை முழுமையாக இடித்துவிட்டு, அஸ்திவாரத்தில் இருந்து புதிதாக கட்டித் தருகிறோம்” என்று உறுதி அளித்துள்ளார்.தற்போதைய நிலவரம்:இந்தக் கோபுரத்திற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் பெருநகர பெங்களூரு அதிகார அமைப்பிடம் (GBA) இருந்து ஆக்குபன்சி சான்றிதழ் (OC) பெறப்பட்டது. தற்போது அந்த சான்றிதழை திரும்ப ஒப்படைத்துவிட்டு, கட்டிடத்தை இடிப்பதற்கான அனுமதியை நிறுவனம் கோரியுள்ளது.இடிப்பு பணிக்கு 6 மாதங்களும், மீண்டும் கட்டி முடிக்க 18 மாதங்களும் என மொத்தம் 2 ஆண்டுகளில் புதிய கோபுரம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம், பாதுகாப்பற்ற கட்டிடத்திற்கு எப்படி OC வழங்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியுள்ளதுடன், பெங்களூரு கட்டுமானத் துறையில் அனுமதி வழங்கும் நடைமுறைகள் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
OC வாங்கிய 3 மாதத்தில் பகீர்! பெங்களூருவில் கோடிகளை கொட்டி கட்டிய சொகுசு டவருக்கு இடிப்பு உத்தரவு – 49 குடும்பங்கள் அதிர்ச்சி